Skip to main content
Author

மாதிவள் இலைஎனில் வாழ்தல் இலைஎனும்
காதல் நெஞ்சக் காந்தமும், நாணத்
திரைக்குட் கிடந்து துடிக்கும் சேயிழை
நெஞ்ச இரும்பும் நெருங்கும்! மணம்பெறும்!

புணர்ச்சி இன்பம் கருதாப் பூவையின்
துணைப்பாடு கருதும் தூயோன், திருமணச்
சட்டத் தாற்பெறத் தக்க தீநிலை
இருப்பினும் அதனை மேற்கொளல் இல்லை.
அஃது திருமணம் அல்ல ஆதலால்!

என்தின வறிந்து தன்செங் காந்தள்
அரும்பு விரற்கிளி அலகு நகத்தால்
நன்று சொறிவாள் என்று கருதி
மணச்சட் டத்தால் மடக்க நினைப்பது
திருந்திவரும் நாட்டுக்குத் தீயஎடுத் துக்காட்டு
மங்கையர் உலகின் மதிப்புக்குச் சாவுமணி!
மலம்மூ டத்தான் மலர்பறித் தேன்எனில்
குளிர்மலர்ச் சோலை கோலென்அழாதா?

திருமண மின்றிச் செத்தான் அந்தச்
சில்லிட்ட பிணத்துக்குத் திருமணம் செய்ய
மெல்லிய வாழைக் கன்றைவெட் டுவது
புரோகி தன்புரட் டுநூல்! அதனைத்
திராவிடர் உள்ளம் தீண்டவும் நாணுமே!

Rate this poem
No votes yet